Wednesday, February 23, 2011

கலைஞருக்கு கடிதம்! தளபதிக்கு தந்தி!

விஜய் மக்கள் இயக்க கண்டன ஆர்ப்பாட்ட துளிகள்!

தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொல்லப்படுவதை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் என்று வெளிப்பார்வைக்கு சொல்லப்பட்டாலும் இந்த பொதுக்கூட்டத்தை தங்கள் தலைவரை சீண்டிப்பார்த்த ஆளும் தரப்புக்கு தங்கள் பலத்தை காட்டும் சந்தர்ப்ப கூட்டமாகவே பார்த்தார்கள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள். கடலூர் மாவட்ட நிர்வாகிகள் இதனை வெளிப்படையாகவே தங்கள் அறிக்கையில் குறிப்பிடவும் செய்தார்கள்.

தனது அரசியல் பயணத்தின் முதல் அடியாக விஜய் தரப்பு கருதிய இந்த பொதுக்கூட்டத்தின் முதல் நாள் நள்ளிரவிலிருந்தே வருண பகவான் பொழிந்து தீர்த்ததை வாழ்த்தென்றும் எச்சரிக்கை என்றும் இருவிதமாக ஜாலி கமன்ட்  அடித்து கொண்டார்கள் விஜய் ரசிகர்கள். ஆனாலும் அடாது மழை விடாது பெய்தாலும் வரிந்து கட்டிக்கொண்டு நாகை நோக்கி வந்திருந்தன ஐநூறுக்கும் மேற்பட்ட வாகனங்கள். முழுக்க முழுக்க நனைந்த நிலையில் மைதானத்தை முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் நிறைத்திருந்தனர். ஆனாலும் தங்கள் தலைமையின் 'லட்சக்கனகானவர்களை திரட்ட வேண்டும்!' என்று ஆசையை நிறைவேற்ற முடியாமல் செய்து விட்டதே இந்த மழை! என்று பலரும் அங்கலாய்த்து கொண்டார்கள் பலரும்!

நாள் பார்த்து பெய்த மழையால் விஜய் கடும் அப்செட். நான்கு மணிக்கே மேடைக்கு வரவேண்டியவர் மழையால் ஐந்து நாற்பத்தைந்து மணிக்கே மேடையேறினார். சில வார்த்தைகள்தான் பேசியிருப்பார். ரசிகர்கள் மேடையை நோக்கி பாய, இதுதான் சந்தர்ப்பம் என காக்கிறேன் பேர்வழி என்று தடியடியில் இறங்கியது காவல்துறை. அங்குமிங்கும் சிதறி ஓடிய ரசிகர்கள் நாற்காலிகளை உடைக்க ஆரம்பித்தனர். இந்த குழப்பத்தில் விஜயின் 'மைக்' ஒயர் அறுந்து கனெக்ஷன் வேறு கட். காவல்துறையின் இந்த திடீர் ஆபரேஷனில் கோபமான விஜய், அங்கிருந்து புறப்பட்டு போய்விட, அப்போதுதான் பல மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களும்  விஜய் மீண்டும் வருவாரா? மாட்டாரா? என்ற குழப்பத்தில் ஆழ்ந்தனர். அவர்களின் அந்த ஆர்வத்தையே ஒருவாறாக தங்களுக்கு சாதகமாக்கிய நிர்வாகிகள் ரசிகர்களை வழிக்கு கொண்டுவந்து விஜயையும் மீண்டும் மேடைக்கு கொண்டு வந்தனர்.

விஜய் என்ன பேசுகிறார் என்பதே புரியாத அளவுக்கு ரசிகர்கள் கூச்சலும், தள்ளுமுள்ளும் கூடிக்கொண்டே இருந்தது. இவ்ளோ பெரிய கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் ஒரு நல்ல மைக்கை வைத்திருக்க கூடாதா? என்று பலரும் அலுத்து கொண்டார்கள். 

பாதுகாப்புக்கு வந்த போலிஸ் சூப்பிரண்டண்ட் உள்ளிட்ட போலீஸ்காரர்கள் முழுவதும் மேடையை ஆக்கிரமித்து நிற்க, பேசிக்கொண்டிருந்த விஜய் திடீரென்று அவர்களை எல்லாம் பின்னே போக சொல்லி கையசைத்தவாறே  களத்தில் இறங்க, சற்று நேரத்திற்கு முன்பெல்லாம் தங்களை 'ஒழுங்கு'படுத்திய' காவல்துறையை தங்கள் தலைவரே ஒழுங்குபடுத்தும் 'கௌண்டர் ஷாட்'டில் அலறி தீர்த்தார்கள் RASIGARGAL.

பாண்டியன், ஜெயகுமார் படுகொலைகள் குறித்து ''இரண்டு அண்ணன்களை  இழந்த வேதனையில் வந்திருக்கிறேன்'' என்றும், ''தமிழனுக்கு விழும் அடியை  என்மேல் விழுந்த அடியாக நினைத்து இனி அவர்களுக்காக போராடுவேன்!'' என்றும் உணர்ச்சிபூர்வமாக பேசிய விஜய், இந்த பிரச்சினை குறித்து பிரதமருக்கு தந்தி அனுப்புங்கள்! என்று தன ரசிகர்களை கேட்டுக்கொண்டார். இதுகுறித்து, ''இலங்கையில் நடந்த போரை நிறுத்த கோரியும் தலைவர் தந்திதான் அனுப்ப சொன்னார். இப்போ இதற்கும் தந்தி அனுப்ப சொல்றார். கடிதம் எழுதறது கலைஞர் பாணினா தந்தி அனுப்ப சொல்றதுதான் தளபதி பாணியா?'' என்று கலக்கல் கமென்ட் கொடுத்தனர் இரு விவரமான ரசிகர்கள்.

விஜயை அருகில் பார்க்கவும், அவரை தங்கள் மொபைலில் பதிவு செய்யவும் தாங்கள் காட்டிய ஆர்வத்தில் பாதியை கூட, 'அரசியல் குறித்து விஜய் என்ன  சொல்ல போகிறார்?' என்ற ரீதியிலாவது அவரது பேச்சை கேட்பதில் காட்டவில்லை ரசிகர்கள். விஜய்க்கு பிறகு விஜயின் தந்தையும், விஜய் மக்கள் இயக்க கௌரவ தலைவருமான எஸ்.ஏ.சி. பேசும் திட்டம் இருந்தது போல!  ஆனால், ''என் வாழ்கை லட்சியம் நிறைவேறிடுச்சு!'' என்று விஜயை நேரில் பார்த்ததை  பலவாறாக பரவசப்பட்டு பேசிக்கொண்டே தங்கள் வாகனங்களை நோக்கி பட்டாம்பூச்சியாய் பறந்தார்கள்.

கொட்டும் மழையிலும் திண்டுக்கல், விருதுநகர், கோவை மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்து ஆச்சர்யம் தந்தார்கள் விஜய் மக்கள் இயக்கத்தினர். இருந்தும் வருண பகவான் போட்ட போட்டில் பொட்டில் அடித்தது போல கொஞ்சம் குழப்பம் கூட்டல் அச்சத்துடனேயே காணப்பட்டனர் மக்கள் இயக்க நிர்வாகிகள். அதில் ஒரு வாடா மாவட்ட நிர்வாகி நம்மிடம் மனம் திறந்து பேசினார்.
''தளபதி அரசியலுக்கு வந்தே தீரவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதை அவரிடமும் அழுத்தமாக சொல்லிவிட்டோம். தான் அரசியலுக்கு வருவதாக இருந்தால் முதலில் மக்கள் போராட்டங்களை கையிலெடுப்பேன் என்று முன்பே சொன்னதுபோல, ஈழப்போர் தொடர்பான உண்ணாவிரத போராட்டத்திற்கு பிறகு, தற்போது இந்த மாபெரும் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் அவர். கடும் மழையிலும் விஜய் சொன்னால் ஒன்று சேரும்  ஆயிரக்கணக்கான வெறித்தனமான ரசிகர்கள் அவருக்கு இருக்கிறார்கள்  என்பதை மட்டும் இந்த கூட்டம் சொல்லவில்லை. அதற்கும் மேலே எங்கள்  தரப்புக்கான கசப்பான பாடங்களும் இருக்கின்றன.

விஜய் ரசிகர் மன்றங்கள் மக்கள் இயக்கமாக மாறிவிட்டாலும், பெரும்பான்மையான எங்கள் ரசிகர்களுக்கு இன்னும் அரசியலுக்கான பக்குவம்   கொஞ்சமும் வரவில்லை. தளபதியின் முகம்தான் அவர்களுக்கு பிரதானமே  ஒழிய அவரது பேச்சை அமைதியாக கேட்கும் பொறுப்புணர்ச்சி எல்லாம் இன்னும் வரவே இல்லை. ஈழத்தில் போரை நிறுத்தக்கோரி விஜய் தலைமையில் நாங்கள் நடத்திய மாபெரும் உண்ணாவிரத நிகழ்வில் யார் சொல்லியும், கேளாமல் குத்துப்பாட்டுக்கு நடனம் கடுப்பெற்றினார்கள் எங்கள் ரசிகர்கள். மட்டுமல்லாமல், எங்கள் தலைமைக்கும் ஒரு கையசைப்பில் கூட்டத்தை அமைதிபடுத்தும் எம்.ஜி.ஆரின் வசீகரம் நிறைந்த ஆளுமை இன்னும் வரவில்லை. அதை அவர் வளர்த்துக்கொள்ள வேண்டும். அல்லது விஜயகாந்த் போல கூட்டத்தினரை கம்பெடுத்துக் கொண்டு மிரட்டி உருட்டி கட்டுப்படுத்தும் கம்பீரத்தை ஆவது வளர்த்து கொள்ள வேண்டும்.   நாகையில் மட்டுமில்லை, ஈரோட்டில் போலிசால் அனுமதி மறுக்கப்பட்ட நலத்திட்ட கூட்டத்திலும் விஜயின் முன்பாகவே தள்ளுமுள்ளு, நாற்காலியை உடைப்பது போன்ற நிகழ்வுகளில் எங்கள் ரசிகர்கள் ஈடுபட்டனர். இதுபோன்ற விஷயங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் காவல் துறை தடியடியில் இறங்கி துவைத்தெடுத்து,  கூட்டத்தை விஜய்க்கு எதிரான மனநிலைக்கே கொண்டு சென்று விடுகிறது.  கடலூரில் ஏற்கனவே இப்படியோரு சம்பவம் நடந்திருக்கிறது.

ஆனால், எத்தனை அனுபவங்கள் இதுபோல் நேர்ந்தாலும், தலைமையோ அல்லது மாவட்ட தலைமைகளோ ரசிகர்களை சரியான விதத்தில்  கட்டுப்படுத்தி காக்கும் கலையை இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. ஆயிரங்களில் கூடும் கூட்டங்கலையே நம்மால் கட்டுக்கோப்பாக நடத்த முடியவில்லை என்றால் நாளை அரசியல் ரீதியான பெரும் கூட்டங்களை எல்லாம் எப்படி நடத்த முடியும்? அதற்கும் மேலாக, சமீபத்தில் முன்னணி வார இதழில் ஆட்சிக்கு எதிரான வார்த்தைகளை வெளிப்படையாகவே தளபதி உதிர்த்திருந்தார். எப்போதும் அப்படி பேசாதவரின் பேச்சு எப்படிப்பட்ட பரபரப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்க வேண்டும்? ஆனால், எங்கள் ரசிகர்கள் இன்னும் காவலன் படத்தில் குத்துப்பாட்டு இல்லாத கவலையிலேயே இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை நம்பி தளபதி தனியாவர்த்தன அரசியல் எல்லாம் செய்யா ஆசைப்பட்டால் அது வீணான வீழ்ச்சிக்கே வித்திடும். அதனால் அவர் தன்னை மதிக்கும் ஒரு அரசியல் கட்சியில் இணைந்து உழைப்பதே நல்லது. நாங்களும் அவரோடு உழைக்கவும் அரசியல் பயிலவும் காத்திருக்கிறோம்.

 காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா என்று தமிழகத்தின் ஆளுமைகள் ஏதோ ஒரு இயக்கத்தை சார்ந்தே தங்களை உச்ச நிலைக்கு வளர்த்து கொண்டார்கள் என்பதை எங்கள் தளபதியும் அவரது தந்தையும் புரிந்துகொள்ள வேண்டும்!''

அரசியல்மயம் ஆகாத எந்தவொரு இயக்கமும் இலக்குகளை அடைய  முடியாது என்பதை விஜய் புரிந்து கொண்டால் சரி!

-உளுத்தூர் ராஜ்கமல்